03 January 2006

ரசிக தேவனின் மயக்கம்...

இதோ இன்னொரு புத்தாண்டு! என்னை சுற்றி நடந்து முடிந்த கொண்டாட்டங்களை பார்த்து சற்றே மிரண்டு போனேன்.. ஒரு மயான அமைதியை தனக்குள் மறைத்து வைத்திருக்கும், இந்த நகரத்தின் இரைச்சலுக்குப் பயந்து அறைக்குள் முடங்கினேன். நண்பனின் தயவால் கிடைத்த 'அன்பே சிவம்' குறுந்தகடு கண்ணில் பட்டது. ஒரு சராசரி பிரம்மச்சாரியின் உந்துதலோடு, விளக்கினை அணைத்து விட்டு 'அன்பே சிவத்தை' தேட ஆரம்பித்தேன்.


                                      ஏற்கனவே பார்த்ததாய் இருந்தாலும், இந்த முறை இது ஏற்படுத்திய பாதிப்பு அதிகமாகவே இருந்தது. கமல் என்ற ஒரு தனி மனிதன் மீதான என் பார்வை வேறாக இருந்தாலும்,அவரது நடிகன் என்ற பரிமாணத்தின் மீது எனக்கு நிறையவே மதிப்பு உண்டு. அவரது சோதனை முயற்சிகள் தோற்றுப் போகும் போது, தமிழ் திரைப்படங்களுக்கு ஏற்படும் ஒரு பின்னடைவினை உணர்ந்திருக்கிறேன். திரைப்படங்களின் சமூக விளைவுகள் பற்றி 'மாலடிமை'கள் மேடை தோறும் முழங்கி வரும் இந்த கால கட்டத்தில், 'அன்பே சிவம்' எந்த மாதிரியான சமூக பாதிப்பை ஏற்படுத்தியது? தெரியவில்லை! ஒரு கம்யூனிச பிரச்சார படமாக முதலில் தோன்றினாலும், நாம் மனிதம் தொலைக்கும் தருணங்களை துல்லியமாக எடுத்துக் காட்டத் தவறவில்லை. மதனின் திரைப்பட பங்களிப்பில் நிச்சயம் இந்த படம் ஒரு மைல் கல். அவரது வசனங்களில் வெளிப்படும் ஒரு சமூக அக்கறையும், அதை மிகைப் படுத்தாமல் வெளிப்படுத்திய கமலின் அசாத்திய முக பாவனைகளும்... நிச்சயமாய் என்னிடம் விவரிக்க வார்த்தை இல்லை. தாடையில் வலி மாற்றி பேசும் போது, விபத்தில் சிக்கி உருமாறிப் போன ஒரு மனிதனை நம் கண் முன் நிறுத்தும் 'நல்ல சிவம்'... அந்த வருட தேசிய விருது பட்டியலில் இல்லை.. "தேசிய விருதுகள் திரை மறைவில் நிர்ணயிக்கப் படுகின்றன". இப்போது நம்புகிறேன்.
                     ஒரு மிக சிறந்த மகனாய், ஒரு அன்பான கணவனாய் பொறுப்புள்ள தந்தையாய்... நமக்கு கொடுக்கப் பட்ட பாத்திரங்கள் அத்தனையிலும் நாம் சிறப்பாய்.... இருந்தும் இந்த திரைப்படம் பார்த்த பின்னர் ஏதோ ஒரு உறுத்தல்... சமுகத்தின் பாலான நமது பொறுப்புகளில் எங்கோ தவறுகிறோம்.? நம்மை சுற்றியதான, நம் அன்பை பரிமாறும் எல்லை மிக சுருங்கியதாய்.. தேடலை மட்டுமே நோக்கியதான நம் பயணத்தில் நம்மை அறியாமல் தொலைக்கும் உணர்வுகள் ஏராளமாய்.. இந்த திரைப்படம் கம்யூனிசத்தின் மீதான என் ஆர்வத்தை அதிகப் படுத்தி விட்டது.
                           இந்த திரைப்பட பார்வையாளர்களில் யாராவது ஒருவர், திரை அரங்கை விட்டு வெளியே வரும் போது, அடுத்தவருக்கு வழி விடும் பொறுமையை கைக்கொண்டிருந்தால், அதுவே இந்த திரைப் படத்தின் மிகப் பெரிய வெற்றி!!
                      திரைக் கதையில் காட்டிய கவனத்தை , கிரணின் தொப்புளில் காட்ட கமல் மறந்து விட்டதால்.. தமிழ் ரசிக கண்மணிகள் 'சகலகலாவல்லவனை' மீண்டும் எடுக்கும் தண்டனையை கமலுக்கு வழங்கி தீர்ப்பளித்து விட்டார்கள்..
                               -வந்திய தேவன்

2 Comments:

At 10:17 PM, Anonymous Anonymous சொல்வது...

தம்பி,

பட்டய கிளப்புங்க ...வாழ்த்துக்கள்

அன்புடன்,
விமலன்

 
At 5:56 AM, Blogger ... சொல்வது...

Waiting for more such blogs..not just reviews on movies, but in all else too!!
Hats off to you Vandhiyathevan! :)

 

Post a Comment

<< Home