வரம் கேட்கும் தேவதை..
யாரோ ஒரு தலைவரின் கைது..
முடங்கிப் போகும் போக்குவரத்து...
தாமதமாய் வந்து கதவு தட்டுவேன்..
மௌனமாய் எனை அணைத்து
உன் கண்ணீரில் காதல் சொல்லுவாய்...
விருந்தினர் வந்ததை மறந்து,
ஒற்றைத் தட்டில் உணவெடுத்து வருவாய்..
நம் இருவருக்குமாய்..
சூழ்நிலை புரிந்ததும்
நாணத்தை இரைத்து விட்டு,
ஓடி மறைவாய்...

காலை முதல் உணவு தவிர்ப்பாய்..
காரணம் கேட்டால்
புன்னகையில் பதிலிருப்பாய்..
இரவில் தெரிந்து கொள்வேன்..
என் சென்ற வார காய்ச்சலுக்கான
உன் பிரார்த்தனை அதுவென்று..
சூரியன் சோம்பல் முறிக்கும்
காலைப் பொழுது..
வரங்களை கேட்கும்
தேவதையாய்...
என் மார்பில் தலை வைத்து..
மெல்லியதாய் கேட்கிறாய்;
"என்னை பிடிச்சிருக்கா?"
உனக்காய் தவமிருக்கும்
இந்த பக்தனை அறியாமல்...
- வந்தியத் தேவன்.