'நீ.....'
மொழி புரியா
பேருந்து பயணம்..
இப்போதெல்லாம்
உன்னிடம் தனிமையில் பேசி..
தாய் மொழி காக்கிறேன்..
நமக்கிடையேயான வணிகத்தில்
நீ எப்போதும் ஏமாளியாய்!!
என் சோகம் பெற்று
புன்னகை விற்கிறாய்...

நீ சொல்லும் ஆறுதலுக்காகவே
அனேகம் முறை தோற்றிருக்கிறேன்..
என் அத்தனை வெற்றிகளிலும்
நான் அடைந்ததில்லை
இத்தனை ஆனந்தம்...
போலியான முகங்கள்..
அங்கீகரிக்கப்படாத உழைப்பு...
களைத்து விட்டேன் தோழி!!
இப்போதெல்லாம் எனக்கு தேவை..
மிதமாய் காய்ச்சல்..
போர்த்த ஒரு போர்வை...
என் தலை கோத உன் விரல்கள்..
சுருக்கமாய் சொன்னால்...
எனக்கு வேண்டும்
இந்த பூமியில் சொர்க்கம்...
-வந்திய தேவன்

