அந்த வீடு.....
தோழி...
நினைவிருக்கிறதா அந்த வீடு..?
அங்குதான் கரைந்தன..
நாம் ஊடல் கொண்ட பகலும்
காதல் தின்ற இரவும்..
என்னை விட அனேகம் முறை
உன் வெட்கம் பார்த்த
நம் அறைச்சுவர்கள்...
நம் இருவரின்
முகம் மட்டுமே காட்டி
களைத்துப் போன அந்த கண்ணாடி...
நம் காதல் கண்டு
களிப்பில் விசிலடித்த
அந்த சமையலறை...
திறக்கும் பொழுதெல்லாம்..
உன் மூச்சு காற்றால்
வரவேற்கும் அந்த படுக்கையறை..

புதைக்கப்பட்ட நம்
காதலுக்கு ஒரு மவுன சாட்சியாய் அந்த வீடு..
நினைவிருக்கிறதா தோழி..
விதியின் சூழ்ச்சியில்....
கலைந்து போன நம் கனவுகள்..
இப்போது அடைய முடியா தூரத்தில் அந்த வீடு
காலத்தின் நகைமுரண்...
இப்போதெல்லாம் முயற்சிக்கிறேன்
பொருளின் மீது காதல் கொள்ள...
நாம் என்பதற்கு சாட்சியான
அந்த வீட்டை வெல்ல..